Monday, December 30, 2013

ஊரில் விழுகிற இழவில் வாழ்வை நடத்தும் சாமான்ய மக்களின் வாழ்வியலை திரையில் சொல்லும் முதல் பதிவு என்றே சொல்ல முடிகிறது விழா படத்தை. வித்தியாசத்தை ஆங்கில படங்களின் டி.வி.டி.யில் தேடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு மத்தியில் விழா ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கொடுக்கிறது. பல்லு போன கிழவிகளையும் கூட ரசிக்க முடிகிறது, கிராமத்து தெருக்களிலும் குடிசைகளிலும் இன்னும் எத்தனையோ கதைகள் ஒளிந்துகிடக்கிறது என்பதற்கு விழா ஒரு எடுத்துக்காட்டு. 


சாவுக்கு பறையடிப்பவன் ஹீரோ சுந்தரம். அதே சாவுக்கு ஒப்பாரி பாடுகிறவர் ஹீரோயின் ராக்கம்மா. இவர்கள் இருவரும் காதலிக்க சாவு வீடு தான் ஒரே வழி. அடுத்த சாவு எப்போன்னு ஹீரோ காத்துக்கெடக்குறாரு... நக்கல் தூக்கலாக இருந்தாலும், ரசிக்கிற வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. பெருசுகளைப் பார்த்து ‘இப்பவே நீ செத்துப் போ’ன்னு ஒரு பாட்டே வருது. ஒரு பக்கம் இது நியாயமா என்ற கேள்வி எழுந்தாலும், அதை விளையாட்டாக எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 

சாவுக்கு பறையடிக்கிற பசங்களும் அந்த ஊர் பெரியவரின் பேரனும் நண்பர்கள். சுந்தரம் - ராக்கம்மா காதலும் கடகடவென வளர்ந்துவிடுகிறது. பெரிய இடத்துப் பையனின் காதலுக்கு ஹீரோவும் அவரது நண்பர்களும் துணை நிற்பதால் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் ஒன்று கூடி ஹீரோவை கொல்ல சதி செய்கிறார்கள். அப்பா அம்மாவை தன் சிறிய வயதிலேயே பரிகொடுத்த ஹீரோ ஒரு நண்பரின் பாதுகாப்பில் தலைமறைவாக இருக்கிறார். ஹீரோயினை வேறு ஒருவருக்கு கல்யாணம் செய்துகொடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. 


பறையடிக்கிற வித்தையை சொல்லிக்கொடுத்ததோடு மட்டுமில்லை, சுந்தரத்தின் எல்லா விஷயங்களிலும் எல்லாமாய் இருந்தவர் அவர் மாமா. அவரை கொன்றால் சுந்தரம் நிச்சயம் பறையடிக்க வந்தே ஆகவேண்டும் என்ற சூழலில், மாமா கொல்லப்படுகிறார். வில்லன்களை வெளுத்து வாங்கிய ஹீரோ, மாமாவின் சாவுக்கு வந்து சேர்கிறார். இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டது, காதலும் கைகூடவில்லை என்று ஆயிரம் கேள்விகளை கேட்கிறது பறையில் ஹீரோ அடிக்கும் அந்த ‘டம டம’ ஒத்தையடி சத்தம்! அந்த கேள்விகளுக்கெல்லாம் இன்னோரு சாவின் மூலம் விடை கொடுப்பது இயக்குனர் அபாரத் திறமை.

ஃபேஸ் புக்கில் அக்கவுண்டு ஓப்பன் பண்ணனும்னு சொல்வதற்கு, அப்போ நீ சீக்கிரம் போய் வக்கீலை பார்த்து பத்திரத்தையெல்லாம் ரெடி பண்ணு என்று சொல்லும் காதல் தண்டபானி முதல், சினேகா பிரசன்னாவின் ஆடிமாதப் பிரிவைப் பற்றி பேசும் ஊர் கிழவிகள் வரை அனைவருமே அசத்திவிட்டார்கள். இழவப்பதி ஒரு படம் என்று நினைத்தாலும் அதை கலகலப்பாக நகர்த்தி இருப்பதில்மீண்டும் மீண்டும் ஆச்சரியப்பட வைப்பவர் இயக்குனர் பாரதி பாலகுமாரன். 


குழந்தை நட்சத்திரமான மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் முதல் படமாக விழா அமைந்தது அவரின் அதிர்ஷ்டம். மதுரை பாணியில் பேசத்தெரியாமல் சிரமப்படுகிறார் என்ற ஒரு குறையைத் தவிர, இந்த கேரக்டருக்கு சரியான பொருத்தம் அவர் தான் என்று சொல்லும் அளவுக்கு ம்னதில் பதிகிறார் ஹீரோ மகேந்திரன். ஹீரோயினும் பாவாடைத் தாவணியில் வந்து பரவசப்படுத்துகிறார். 

ஜேம்ஸ் வசந்தன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டம் போட வைக்கிற, அழவைக்கிற என பல வகையான பாடல்களைக் கொடுத்து படத்தின் உயிராக இருந்திருக்கிறார். அது பறையடியின் மகிமையா இல்லை ஜேம்ஸ் வசந்தனின் திறமையா என்று தெரியவில்லை, பாடல்களுக்கு யாரும் வெளியே செல்ல மாட்டார்கள் என்பது சாவு மேல சத்தியம். ‘சொல்லாம கொள்ளாம என்னவிட்டு போயிட்டியே... பாக்காம பேசாம கண்ணத் தாண்டி போயிட்டியே...’ என்று ஒப்பாரி வரிகள் காதல் பாடலாக ஒலிப்பது புதுமையிலும் புதுமை.  

ஒதுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வை பதிவு செய்திருக்கும் விழாவை யாரும் தமிழ்சினிமாவைவிட்டு ஒதுக்கிவிட முடியாது என்றே சொல்லலாம். ஒப்பாரி பாடலிலும் பறை சத்ததிலும் ஒரு வாழ்க்கை இருப்பதை உரக்கச் சொல்லி ரசிக்க வைக்கிறது விழா. 

விழா - களைகட்டுகிறது!

0 comments :

Post a Comment

 
Toggle Footer