Sunday, December 29, 2013

நடிகர் : மாஸ்டர் மகேந்திரன்

நடிகை : மாளவிகா மேனன்

இயக்குனர் : பாரதி பாலகுமாரன்

இசை : ஜேம்ஸ் வசந்தன்

ஓளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்

மதுரை அருகே ஒரு கிராமத்து பெரியவர் திடீரென இறந்துபோகிறார். ஊருக்கு பலவித நன்மைகளை செய்து தருகிறேன் என்று சொல்லியிருந்த அந்த பெரியவர் திடீரென இறந்துபோனதால் அந்த கிராமமே அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறது.

அவரது மனைவியான ஜெயலட்சுமி, அவர் சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றுவார் என்று பார்த்தால், அவரோ தன் கணவன் ஊருக்கு செய்வதாக சொன்னதை தன்னால் செய்துகொடுக்க முடியாது என பிடிவாதம் பிடிக்கிறார்.

அதே ஊரில் வசிக்கும் நாயகன் மகேந்திரன் சாவு வீட்டில் தப்பு அடிக்கிறவர். நாயகி மாளவிகா மேனனின் பாட்டி சாவு வீட்டில் ஒப்பாரி பாடல் பாடுகிறவர். பாட்டிக்கு வயதாகிவிட்டதால் நாயகி அந்த பொறுப்பை ஏற்று சாவு வீடுகளில் ஒப்பாரி பாடுகிறார்.

அப்படி ஒருநாள் நாயகி ஒப்பாரி பாடும்போது அவரைப் பார்க்கும் நாயகன் அவள்மீது காதல் கொள்கிறார். அதன்பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை பரிமாறிக்கொண்டு காதலிக்க தொடங்குகின்றனர்.

வெளிநாட்டில் படித்துவிட்டு அந்த ஊருக்கு வந்திருந்த ஜெயலட்சுமியின் பேரன், நாயகன் மற்றும் அவரது நண்பர்களுடன் சுற்றித் திரிகிறார். அதே ஊரில் இருக்கும் தாழ்ந்த சாதி பெண்ணையும் காதலிக்கிறார். இது அந்த பெண்ணின் அண்ணனுக்கு தெரியவரவே, உன்னுடைய பாட்டியை இந்த ஊருக்கு நல்லது செய்யச் சொல், அதன்பிறகு தனது தங்கையை அவனுக்கு திருமணம் செய்துகொடுப்பதாக கூறுகின்றார்.

ஆனால், பாட்டியோ பேரனுக்கு அவனது மாமன் மகளைத்தான் திருமணம் முடித்துக் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். தனது விருப்பத்தை பேரனிடம் அவள் கூற, அவனோ இந்த ஊருக்கு தாத்தா செய்வதாக உறுதியளித்த கடமைகளை செய்து கொடுப்பதாக என்னிடம் உறுதிமொழி எடுத்தால் தான் அவளுடைய விருப்பத்தை ஏற்பதாக கூறுகிறான். அவளும் அதற்கு ஒப்புக் கொண்டு ஊர் மக்களுக்கு பணத்தை கொடுக்கிறாள்.

இதற்கிடையில் நண்பர்கள், ஜெயலட்சுமியின் பேரனுக்கும், தாழ்ந்த சாதி பெண்ணுக்கும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் முடித்து வைத்துவிடுகின்றனர். இதனால் ஜெயலட்சுமி பாட்டி கொதித்து எழுகிறார். தன்னுடைய பேரனுக்கு கல்யாணம் செய்துவைத்த மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை தேடி பிடித்து தன்னுடைய வீட்டில் அடைத்து வைக்கிறார்.

மறுமுனையில் தன்னுடைய காதலியான மாளவிகா மேனனுக்கும், யுகேந்திரனுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாளவிகா மேனனின் விருப்பம் இல்லாமலேயே நிச்சயதார்த்தமும் நடந்து விடுகிறது.

கடைசியில், நாயகன் ஜெயலட்சுமியின் பிடியில் இருந்து தப்பித்தாரா? வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது காதலியான நாயகியை மீட்டு நாயகன் கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் மகேந்திரன் சிறுவயதிலிருந்தே நடிப்பதால் நடிப்பு என்பது இவருக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. படம் முழுக்க செமத்தியாக நடித்திருக்கிறார். தப்பு அடிப்பதை நேர்த்தியாகவும், லாவகமாகவும் கையாண்டுள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் ஒன்றி நடித்திருக்கிறார். மாளவிகா மேனனை வலிய வலிய காதலிப்பதில் நவரசங்களையும் காட்டியுள்ளார்.

மாளவிகா மேனன் திரையில் பார்க்க மிக அழகாக இருக்கிறார். ஏற்கெனவே ஒரு படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவருக்கு இந்த படத்தில் மெயின் ரோல் கொடுத்ததை அழகாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ராக்கம்மா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். இவர் ஒப்பாரி பாடும் அழகே தனிதான்.

பாட்டியாக வரும் பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமிக்கு ரொம்பவும் வலுவான கதாபாத்திரம். பெண் வில்லியாக படம் முழுக்க மிரட்டியிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் ‘கல்லூரி‘ வினோத் மற்றும் கோபால், ஸ்மைல் செல்வா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளனர்.

நாயகனும், நாயகியும் சந்திக்க வேண்டுமென்றால் ஒரு சாவு வீட்டில் தான் சந்திக்க வேண்டும். ஒருவருடைய சாவில் தான் இவர்களுடைய காதலே வளாந்து வருகிறது. இப்படி ஒரு காதலை வித்தியாசமான கோணத்தில் சிந்தித்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

படம் முழுவதும் நகைச்சுவையாக கொண்டு போயிருக்கிறார். எதிர்பாராத கிளைமாக்ஸை கொடுத்து அசத்தியிருக்கிறார். சினிமா பிரபலங்களின் பாராட்டுதல்களை பெற்ற ஒரு குறும்படத்தை இரண்டே கால் மணி நேரம் சொல்வதற்காக படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரொம்பவும் நீளமாக எடுத்திருக்கிறார்கள். அது கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறது. அந்த காட்சிகளின் நீளங்களை குறைத்துக் கொண்டால் படம் இன்னும் கொஞ்சம் பலம் கொண்டு எழுந்திருக்கும்.

யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் ஒரு பலம். ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ஒப்பாரி பாடல்கள் ரொம்பவும் கவர்கின்றன. மதன் கார்க்கி எழுதிய ‘செத்துப்போ செத்துப்போ’ பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம்.

மொத்தத்தில் ‘விழா’ கொண்டாட்டம்.


0 comments :

Post a Comment

 
Toggle Footer