Sunday, November 17, 2013

என்னை யாரோடும் ஒப்பிட வேண்டாம், எனக்கு நிகர் நான்தான் என்று கூறுகிறார் லட்சுமி மேனன்.

தமிழகம் முழுவதும் பாண்டிய நாடு படத்துக்காக சுற்றுப் பயணம் செய்து வருகிறார்கள் விஷால் மற்றும் லட்சுமி மேனன்.

இதற்கு முன் எந்தப் படத்துக்கும் ஹீரோயின்கள் இந்த அளவு சுற்றியதில்லை எனும் அளவுக்கு உள்ளது அவர் ஈடுபாடு.

இந்த முறை கோவையில் நடந்த விழாவுக்கு வந்திருந்த லட்சுமி மேனன் ரசிகர்களுடன் உற்சாகமாக உரையாடினார். பாண்டிய நாடு தனக்கு பெரும் புகழைத் தந்திருப்பதாக பெருமைப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் நான் சினிமாவில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை.

8ம் வகுப்பு படிக்கும் வரை என்னுடைய கனவு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. எதிர்பாராத விதமாக கலைத்துறைக்கு வந்து விட்டேன்.

இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் நான் எந்த நடிகைகளுடனும் என்னை ஒப்பிட மாட்டேன். எனக்கு நிகர் நானேதான் என்கிறார் லட்சுமி மேனன்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer